இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் சமந்தா!

தமிழ் படங்களில் அவ்வப்போது தலையைக் காட்டும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், முதல்முறையாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கதையை கேட்ட பிறகு தனது முடிவை சொல்ல சமந்தா திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்காலிகமாக இப்படத்துக்கு ராக்ஸ்டார் என பெயரிட்டுள்ளனர்.

சுவிஸில் அடுத்தடுத்து மீட்கப்பட்ட 2 சடலங்கள்: அதிர்ச்சியில் பொலிசார்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மேலும் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவிஸின் பெர்ன் மாகாணத்தில் உள்ள Langenthal என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு வாகனம் பழுதுப்பார்க்கும் இடத்தில் 2 வாலிபரின் சடலங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதே பெர்ன் மாகாணத்தில் உள்ள Laupen என்ற பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று மேலும் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நேற்று இரவு வேளையில், Laupen பகுதி மக்களுக்கு அவசர தகவல் ஒன்றை அளித்துள்ளனர்.

தகவலை பெற்று வந்த பொலிசார், அங்குள்ள ஒரு குடியிருப்பில் 2 சடலங்களை உயிரற்ற நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.

சடலங்களை மீட்ட பொலிசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Langenthal நகரில் கண்டுபிடிக்கப்பட்ட மரணம் கொலையா தற்கொலையா என விசாரணை நிறைவு பெறாத நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்திற்கும் புதன் கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிசாரை உடனடியாக தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெர்ன் மாகாணத்தில் 2 நாட்களுக்குள் 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி முனையில் பொலிசாரை மிரட்டிய கொள்ளையர்கள்!

சுவிட்சர்லாந்த் நாட்டில் உள்ள வீடு ஒன்றில் திருட முயன்றபோது பொலிசாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பெர்ன் மாகாணத்தில் உள்ள Niederwangen என்ற நகரில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில், Bodelenweg பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரை மீது மர்ம நபர்கள் இருவர் ஏறிக்கொண்டு இருப்பதாக பொலிசாருக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

அப்போது, அங்குள்ள வீட்டின் கூரை மீது கொள்ளையர் இருவர் அமர்ந்து வீட்டிற்குள் குதிக்க முயற்சி செய்துகொண்டு இருந்துள்ளனர்.

இந்த வேளையில் பொலிசார் அங்கு வந்துள்ளதை கண்ட கொள்ளையரில் ஒருவன் கீழே குதித்து காரில் தப்ப முயன்றுள்ளான்.

ஆனால், கொள்ளையனை பொலிசார் துரத்தியுள்ளனர். சிறிது தூரத்தில் கொள்ளையனை பொலிஸ் வாகனம் மடக்கியதை தொடர்ந்து, கொள்ளையன் பொலிசாரை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளான்.

நிலமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிசார் சர்வீஸ் துப்பாக்கியை கொண்டு கொள்ளையனை நோக்கி சுட்டுள்ளனர்.

சில நிமிடங்களில் இரண்டு கொள்ளையர்களையும் பொலிசார் கைது செய்தனர்.

துப்பாக்கி சூட்டில் ஒருவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றும், கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் அரசு மக்களின் எதிர்கால நிதிதிட்டங்களை குறைத்ததனால் கடைகளை உடைத்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்

சுவிட்சர்லாந்து அரசானது மக்களின் எதிர்கால நிதிதிட்டங்களை குறைத்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் கடைகளை உடைத்து நொறுக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் ஜெனிவா மாகாண அரசு தான் இந்த அதிரடி நிதிதிட்ட குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மாகாண அரசின் செயல்பாடுகளால் ஆத்திரம் அடைந்த சில போராட்டக்காரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றுக்கூடி போராட்டம் தொடர்பாக திட்டமிட்டுள்ளனர்.

பின்னர், பொலிசாரிடம் அனுமதி பெறாமலேயே ஜெனிவா நகர வீதிகளில் நேற்று இரவு 9 மணியளவில் நுழைந்துள்ளனர்.

சுமார் 400 பேர் கொண்ட போராட்டக்காரர்கள் ஜெனிவா நகர வீதிகளில் நுழைந்தவுடன் அவர்களில் சுமார் 30 பேர் அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடைகளை உடைத்து நொறுக்கியது மட்டுமில்லாமல், 19ம் நூற்றாண்டை சேர்ந்த கிராண்ட் தியேட்டரையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்னர் இன்று காலை எழுந்து வீடுகள் மற்றும் கடைகளை பார்த்த உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய Jean Philippe என்ற பொலிஸ் அதிகாரி, சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஏனெனில், அது மிக மோசமான வன்முறையாகவும் மாற வாய்ப்புள்ளது. இந்த அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட 30 பேர் தொடர்பான விவரங்களை சேகரித்துள்ளோம். அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார்.

இரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தில் லட்சக்கணக்கான பிராங்க் மதிப்பில் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸில் இரவு நேரத்தில் பனிச்சறுக்கு விளையாட சென்ற நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்து நாட்டில் இரவு நேரத்தில் பனிச்சறுக்கு விளையாட சென்ற நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் Saint Gallen மாகாணத்தில் உள்ள Flumserberg என்ற பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் 3 பேர் பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளனர்.

3 நபர்களும் தாழ்வான பனிப்படலத்தில் சறுக்கிக்கொண்டு Tannenboden என்ற பகுதியை நோக்கி விரைந்து சென்ற முடிவு செய்தனர்.

முதலில், இரண்டு நபர்கள் சறுக்கொண்டு சென்றுவிட, மூன்றாவதாக 48 வயதான நபர் ஒருவர் சறுக்கொண்டு வரும்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள மின்கம்பம் மீது பலமாக மோதியுள்ளார்.

பல நிமிடங்களாக அவர் கீழே வராததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் வந்த வழியே திரும்பி நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, ஓரிடத்தில் மயங்கிய நிலையில் நண்பர் அடிப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் நபரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Flumserberg பகுதியில் அதிக அளவு சுற்றுலாப்பயணிகள் வராத நிலையிலும், 3 வாரங்களுக்கு இந்த பகுதி பொதுமக்களின் உபயோகத்திற்கு திறக்கப்பட்டுள்ள நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தவர்! ஆதரவளிக்குமாறு ஈழத்தமிழ் பேரவை கோரிக்கை

சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர் ஜெயக்குமார் துரைராஜாவை ஆதரிக்குமாறு கோரி சுவிஸ் ஈழத்தமிழரவை செய்திக் குறிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே!!!

எதிர்வரும் 28 ஆம் திகதி பெப்ரவரி மாதம் சுவிஸில் மாநகரசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் St.Gallen மாநகரசபைக்கு சுவிஸ் ஈழத்தமிழரவையின் St. Gallen மாநிலப் பிரதிநிதியும், சுவிஸ் பசுமைக் கட்சியின் (Grüne Partei) உறுப்பினருமான ஜெயக்குமார் துரைராஜா அவர்கள் போட்டியிடுகிறார்.

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முழுமையாக ஏற்று அதற்காக இன்றுவரை ஓயாது பணிபுரியும் ஜெயக்குமார் துரைராஜா அவர்கள் 2010 ஆம் ஆண்டு சுவிஸ் தழுவிய அளவில் நடாத்தப்பட்ட சுவிஸ் ஈழத்தமிழரவைக்கான தேர்தலில் St. Gallen மாநிலத்தில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழீழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Save Act என்ற அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஒன்றை உருவாக்க பெரும் பணியாற்றி பல பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் நாம் வாழும் சுவிஸ் நாட்டில் ஆரோக்கியமான வாழ்வை தமிழர்களின் மத்தியில் விதைத்துவரும் நலவாழ்வு எனும் அமைப்பிலும் பணிபுரிகிறார்.

போரின் வடுக்களை முதுகில் சுமந்து புலம்பெயர்ந்து வந்தாலும், அறிவியல் எமது அடையாளம், எம்மாலும் சாதிக்க முடியும் என்று சுவிஸில் சாதித்துக் காட்டிய முதலாம் தலைமுறையினரில் ஜெயக்குமார் துரைராஜாவும் ஒருவராவார்.

மருத்துவ சுகாதாரத் துறையில் Pflegefachmann – HF ஐ பயின்று அத்துறையில் தோழில்புரிந்தும் வருகிறார். பசுமைக் கட்சியில் இணைந்து தமிழ் மக்களினதும், வெளிநாட்டவர்களுக்குமான நன்மைகளுக்காக பாடுபட்டு வரும் அவர் ஏற்கனவே நகராட்சி உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளை பெற்றிருந்தார். அதன் நிமிர்த்தம் ஏற்கனவே தெரிவானவர் பதவிதுறக்க ஜெயக்குமார் துரைராஜா அவர்கள் நியமனம் அடைந்துள்ளார். இந்நிலையில் தான் அவர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்.

சுவிஸ் மக்கள் மத்தியில் தமிழர்களின் அடையாளமாக வலம்வரும் ஜெயக்குமார் துரைராஜா அவர்கள் இளைஞர்களின் முன்மாதிரியாக இருக்கும் தகுதி பெற்றவர்.

ஆகவே தமிழ்பேசும் மக்களாகிய நாம் எமக்கான வாக்குரிமையை பயன்படுத்தி ஓர் ஈழத்தமிழனை உரிமையுடன் தேசியம் நிலைக்க அதிகாரபீடம் ஏற்றுவோம்.

வாக்களிக்கும் போது அவதானிக்கவேண்டியவை:

ஜெயக்குமார் துரைராஜா பொறிக்கப்பட்டிருக்கும் வாக்குச்சீட்டில் திரு.IMAG4206 ஜெயக்குமார் துரைறாயா அவர்களின் பெயரின் கீழ் மீண்டும் ஒருமுறை அவருடைய பெயரையும் வாக்கிலக்கங்களையும் எழுதுவதன்மூலம் 2 வாக்குகளை நீங்கள் அளிக்கலாம்.

அல்லாவிடில் அவருக்கு அதிகூடிய வாக்குகளை அளிப்பதற்கு வேறொரு வழி உண்டு:

கட்சிகளின் பெயர் அச்சடிக்கப்படாமல் இருக்கும் வாக்குச் சீட்டின் மேற்பகுதியில் திரு. ஜெயக்குமார் துரைராஜா அவர்களின் கட்சியான Grüne ஐ எழுதிவிட்டு கீழே பெயர்கள் எழுத ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் 2 முறை ஜெயக்குமார் துரைறாயா அவர்களின் வாக்கிலக்கத்தையும், பெயரையும் எழுதினால் முழுமையாக உங்களது வாக்கை திரு. ஜெயக்குமார் துரைராஜாவை அவர்களுக்கு வழங்கலாம்.

பெப்ரவரி 10 ஆம் திகதியளவில் வாக்குச் சீட்டுக்கள் தபால் மூலம் உங்கள் வீடுகளை வந்தடையும். இறுதி நாள்வரை காலம்தாழ்த்தாமல் உடனே நிரப்பி அனுப்பவும். அல்லாவிடில் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குப்பெட்டிகளுக்குள் போடவும். தபால் மூலம் இறுதிநாள் அனுப்பினால் வாக்குச்சீட்டு செல்லுபடியற்றதாக மாறிவிடும்.

சமையல் நிபுணர் தற்கொலை விவகாரம் வெளியாகும் உண்மை!!

உலகின் தலை சிறந்த சமையல் நிபுணர்களில் ஒருவரான சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டதற்கான அதிர்ச்சி காரணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சுவிஸின் வாட் மாகாணத்தில் Hotel de Ville என்ற 3 நட்சத்திர ஹொட்டலை நடத்தி வந்த Benoit Violier(45) என்பவர் உலகின் தலை சிறந்த சமையல் நிபுணர்களில் ஒருவர்.

சமையல் துறையில் எண்ணற்ற பரிசுகள் மற்றும் விருதுகளை பெற்றுள்ள இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தியபோது பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து சுவிஸ் தலைமை சமையல் நிபுணரான Jacky Donatz என்பவர் பேசியபோது, ‘தற்கொலை செய்துக்கொண்ட சமையல் நிபுணர் உலகின் தலைசிறந்த சமையல் கலைஞர்களில் ஒருவர்.

ஆனால், ஒருவர் ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அவருக்கு எண்ணற்ற மன அழுத்தங்கள் ஏற்படும்.

குறிப்பாக, தனது துறை மீது இரவு பகல் என பார்க்காமல் 24 மணி நேரமும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த மன அழுத்தத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இது தான் அவரை தற்கொலைக்கும் தூண்டியுள்ளது’ என கூறியுள்ளார்.

சுவிஸின் மற்றொரு சமையல் நிபுணரான Ivo Adam கூறியபோது, ‘Benoit Violier அவர்களின் தற்கொலை தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலைப்பழு காரணமாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் அவரை தற்கொலைக்கு கொண்டு சென்றுள்ளது.

ஒரு துறையில் ஒருவர் தலைசிறந்து விளங்குவதற்காக கொடுக்கப்படும் விருதுகள் பாராட்டுக்கள் மட்டுமல்ல….அது ஒரு வகையில் சாபமும் கூட.

விருது கிடைத்து விட்டால், இந்த மதிப்பை சமுதாயத்தில் தக்க வைத்துக்கொள்ள முன்பு இல்லாத வகையில் கூடுதல் அக்கறையை தனது பணியில் காட்ட நேரிடும். இதுபோன்ற ஒரு சூழல் தான் அவரை தற்கொலை தூண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், Benoit Violier தற்கொலை சம்பவத்தில் பொலிசார் இதுவரை அதிகாரபூர்வமான தகவல்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளை சம்பவத்தில் பொலிஸாருக்கு கத்திக்குத்து!!

சுவிட்சர்லாந்து நாட்டில் முடித்திருத்தும் தொழியாளியை தாக்கி கொள்ளையிடும்போது தடுக்க வந்த 3 பொலிசாரையும் தனி ஒருவனாக எதிர்த்து தாக்கிய கொள்ளையனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் சூரிச் நகரில் உள்ள Zeughausstrasse என்ற பகுதியில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த பகுதியில் உள்ள முடித்திருத்தும் சலூன் கடை ஒன்றிற்கு நேற்று 22 வயதான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வந்துள்ளார்.

சலூன் கடைக்குள் நுழைந்ததும், அங்குள்ள Ibrahim Fatah என்ற உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளரை பலமாக கத்தியால் தாக்கியுள்ளார்.

இருவரையும் தாக்கிய கொள்ளையன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளான். இந்த தாக்குதல் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைவில் வந்து சேர்ந்துள்ளனர்.

இரு புறங்களிலும் வந்த 3 பொலிசார் கொள்ளையனை வழிமறைத்து நின்றுள்ளனர். சூழலை அறிந்த கொள்ளையன் கத்தியை காட்டி பொலிசாரை மிரட்டியுள்ளான்.

துணிச்சலை வரவழைத்துக்கொண்டு பொலிசார் கொள்ளையனை நெருங்கியுள்ளனர். அப்போது, திடீரென பொலிசார் ஒருவர் மீது கொள்ளையன் பாய்ந்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்துள்ளான்.

சற்றும் எதிர்பாராத 3 பொலிசாரும் கொள்ளையனின் கை, கால்களை மடக்கி பிடித்து துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். கொள்ளையனுடன் இருந்த அவரது சகோதரியையும் பொலிசர் கைது செய்தனர்.

கொள்ளையனிடம் ஏற்பட்ட சண்டையில் 3 பொலிசாருக்கும் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சலூன் கடை உரிமையாளர் பேசியபோது, ‘எங்கள் மீது தாக்குதல் நடத்திய இதே நபர் கடந்த செவ்வாய்கிழமை கடைக்கு வந்து முன்னோட்டம் பார்த்துள்ளார்.

பின்னர், சலூன் கடையின் சூழலை நன்கு ஆராய்ந்துவிட்டு மீண்டும் வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

போதை மருந்து பயன்படுத்த 4 நகரங்களில் அனுமதி: சுவிஸ் அரசு அதிரடி!

சுவிட்சர்லாந்தில் உள்ள 4 முக்கிய நகரங்களில் சட்டசிக்கல்கள் இன்றி போதை மருந்து பயன்பாட்டிற்கு சிறப்பு விடுதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டில் உள்ள 4 முக்கிய நகரங்களான சூரிச், பாசெல், பெர்ன் மற்றும் ஜெனீவா பகுதிகளில் சிறப்பு விடுதிகளை அமைக்க அந்த நகர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து முடிவெடுக்க இந்த 4 நகரங்களின் அதிகாரிகளும் வியாழக்கிழமை அன்று மீண்டும் கூடி விவாதித்துள்ளனர்.

சுவிஸ் நாட்டில் போதை மருந்து பயன்பாட்டிற்கு தடை இருந்த போதும் சட்டவிரோதமாக விற்பனையும் பயன்பாட்டும் நடந்தே வந்துள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சுவிஸ் நாட்டின் 4 முக்கிய நகரங்களில் இந்த போதை மருத்து பயன்பாட்டிற்கு சிறப்பு விடுதிகளை அனுமதிக்கும் யோசனை எழுந்துள்ளது.

இதனால் எந்த கெடுபிடியும் இன்றி 2,000 பேர் வரை இந்த விடுதிகளில் சென்று போதை மருந்து பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.

இந்த சிறப்பு திட்டம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், தொடர்ந்து இந்த விடுதிகள் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

4 நகரங்கலின் இந்த சிறப்பு திட்டத்திற்கு அரசு மற்றும் மத்திய பொது சுகாதார அலுவலகம் அனுமதி வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போதை மருந்து தொடர்பாக சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி முறை சட்டத்தின்படி பயன்படுத்துவதும் சொந்தமாக வைத்திருப்பதும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.

போதை மருந்து தொடர்பாக சுவிஸ் நாட்டில் ஆண்டுக்கு 30,000 வழக்குகள் பதியப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

மின்சார கம்பிகளில் சிக்கிய இளைஞன்! பரிதாபகரம்

சுவிட்சர்லாந்து நாட்டில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவிட்டு மின்சார ரயிலின் கூரை மீது வாலிபர் ஒருவர் ஏறியபோது நிகழ்ந்த விபரீத சம்பவம் ரயில் நிலைய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுவிஸின் லூசெர்ன் நகரில் உள்ள SBB ரயில் நிலையத்திற்கு 18 வயதான வாலிபர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை சென்றுள்ளார்.

நள்ளிரவு ஒரு மணி நேரம் என்பதால், ரயில் நிலையத்தில் இரண்டு பாதுகாவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

அப்போது, நடைமேடையில் சிறிது தூரம் நடந்து சென்ற அந்த வாலிபர் திடீரென அங்கு நின்றுருந்த ஒரு ரயிலில் கூரை மீது ஏறியுள்ளார்.

ரயில் கூரைக்கு மேல் சுமார் 15,000 வோல்ட்ஸ் அளவுள்ள மின்சார கம்பிகள் இருந்துள்ளதை வாலிபர் கவனிக்க தவறியுள்ளார்.

கம்பியில் வாலிபரின் உடல் உரசியதை தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் அவர் சில மீற்றர்கள் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார்.

சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர்கள் விரைந்து வந்து வாலிபருக்கு முதலுதவி அளித்தனர். ஆனால், வாலிபரின் உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக அவசர மருத்துவ வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், மருத்துவர்கள் சென்று வாலிபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கவலைக்கிடமாக இருந்த அந்த நபரின் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ரயில் நிலைய அதிகாரி ஒருவர் பேசுகையில், ‘மின் விபத்தில் சிக்கிய அந்த வாலிபர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், நள்ளிரவு நேரத்தில் எதற்காக ரயில் கூரை மீது அவர் ஏறினார் என்பது குறித்து தெரியாததால், இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.