துப்பாக்கி முனையில் பொலிசாரை மிரட்டிய கொள்ளையர்கள்!

சுவிட்சர்லாந்த் நாட்டில் உள்ள வீடு ஒன்றில் திருட முயன்றபோது பொலிசாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பெர்ன் மாகாணத்தில் உள்ள Niederwangen என்ற நகரில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில், Bodelenweg பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரை மீது மர்ம நபர்கள் இருவர் ஏறிக்கொண்டு இருப்பதாக பொலிசாருக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

அப்போது, அங்குள்ள வீட்டின் கூரை மீது கொள்ளையர் இருவர் அமர்ந்து வீட்டிற்குள் குதிக்க முயற்சி செய்துகொண்டு இருந்துள்ளனர்.

இந்த வேளையில் பொலிசார் அங்கு வந்துள்ளதை கண்ட கொள்ளையரில் ஒருவன் கீழே குதித்து காரில் தப்ப முயன்றுள்ளான்.

ஆனால், கொள்ளையனை பொலிசார் துரத்தியுள்ளனர். சிறிது தூரத்தில் கொள்ளையனை பொலிஸ் வாகனம் மடக்கியதை தொடர்ந்து, கொள்ளையன் பொலிசாரை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளான்.

நிலமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிசார் சர்வீஸ் துப்பாக்கியை கொண்டு கொள்ளையனை நோக்கி சுட்டுள்ளனர்.

சில நிமிடங்களில் இரண்டு கொள்ளையர்களையும் பொலிசார் கைது செய்தனர்.

துப்பாக்கி சூட்டில் ஒருவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றும், கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.