சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தவர்! ஆதரவளிக்குமாறு ஈழத்தமிழ் பேரவை கோரிக்கை

சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர் ஜெயக்குமார் துரைராஜாவை ஆதரிக்குமாறு கோரி சுவிஸ் ஈழத்தமிழரவை செய்திக் குறிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே!!!

எதிர்வரும் 28 ஆம் திகதி பெப்ரவரி மாதம் சுவிஸில் மாநகரசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் St.Gallen மாநகரசபைக்கு சுவிஸ் ஈழத்தமிழரவையின் St. Gallen மாநிலப் பிரதிநிதியும், சுவிஸ் பசுமைக் கட்சியின் (Grüne Partei) உறுப்பினருமான ஜெயக்குமார் துரைராஜா அவர்கள் போட்டியிடுகிறார்.

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முழுமையாக ஏற்று அதற்காக இன்றுவரை ஓயாது பணிபுரியும் ஜெயக்குமார் துரைராஜா அவர்கள் 2010 ஆம் ஆண்டு சுவிஸ் தழுவிய அளவில் நடாத்தப்பட்ட சுவிஸ் ஈழத்தமிழரவைக்கான தேர்தலில் St. Gallen மாநிலத்தில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழீழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Save Act என்ற அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஒன்றை உருவாக்க பெரும் பணியாற்றி பல பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் நாம் வாழும் சுவிஸ் நாட்டில் ஆரோக்கியமான வாழ்வை தமிழர்களின் மத்தியில் விதைத்துவரும் நலவாழ்வு எனும் அமைப்பிலும் பணிபுரிகிறார்.

போரின் வடுக்களை முதுகில் சுமந்து புலம்பெயர்ந்து வந்தாலும், அறிவியல் எமது அடையாளம், எம்மாலும் சாதிக்க முடியும் என்று சுவிஸில் சாதித்துக் காட்டிய முதலாம் தலைமுறையினரில் ஜெயக்குமார் துரைராஜாவும் ஒருவராவார்.

மருத்துவ சுகாதாரத் துறையில் Pflegefachmann – HF ஐ பயின்று அத்துறையில் தோழில்புரிந்தும் வருகிறார். பசுமைக் கட்சியில் இணைந்து தமிழ் மக்களினதும், வெளிநாட்டவர்களுக்குமான நன்மைகளுக்காக பாடுபட்டு வரும் அவர் ஏற்கனவே நகராட்சி உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளை பெற்றிருந்தார். அதன் நிமிர்த்தம் ஏற்கனவே தெரிவானவர் பதவிதுறக்க ஜெயக்குமார் துரைராஜா அவர்கள் நியமனம் அடைந்துள்ளார். இந்நிலையில் தான் அவர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்.

சுவிஸ் மக்கள் மத்தியில் தமிழர்களின் அடையாளமாக வலம்வரும் ஜெயக்குமார் துரைராஜா அவர்கள் இளைஞர்களின் முன்மாதிரியாக இருக்கும் தகுதி பெற்றவர்.

ஆகவே தமிழ்பேசும் மக்களாகிய நாம் எமக்கான வாக்குரிமையை பயன்படுத்தி ஓர் ஈழத்தமிழனை உரிமையுடன் தேசியம் நிலைக்க அதிகாரபீடம் ஏற்றுவோம்.

வாக்களிக்கும் போது அவதானிக்கவேண்டியவை:

ஜெயக்குமார் துரைராஜா பொறிக்கப்பட்டிருக்கும் வாக்குச்சீட்டில் திரு.IMAG4206 ஜெயக்குமார் துரைறாயா அவர்களின் பெயரின் கீழ் மீண்டும் ஒருமுறை அவருடைய பெயரையும் வாக்கிலக்கங்களையும் எழுதுவதன்மூலம் 2 வாக்குகளை நீங்கள் அளிக்கலாம்.

அல்லாவிடில் அவருக்கு அதிகூடிய வாக்குகளை அளிப்பதற்கு வேறொரு வழி உண்டு:

கட்சிகளின் பெயர் அச்சடிக்கப்படாமல் இருக்கும் வாக்குச் சீட்டின் மேற்பகுதியில் திரு. ஜெயக்குமார் துரைராஜா அவர்களின் கட்சியான Grüne ஐ எழுதிவிட்டு கீழே பெயர்கள் எழுத ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் 2 முறை ஜெயக்குமார் துரைறாயா அவர்களின் வாக்கிலக்கத்தையும், பெயரையும் எழுதினால் முழுமையாக உங்களது வாக்கை திரு. ஜெயக்குமார் துரைராஜாவை அவர்களுக்கு வழங்கலாம்.

பெப்ரவரி 10 ஆம் திகதியளவில் வாக்குச் சீட்டுக்கள் தபால் மூலம் உங்கள் வீடுகளை வந்தடையும். இறுதி நாள்வரை காலம்தாழ்த்தாமல் உடனே நிரப்பி அனுப்பவும். அல்லாவிடில் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குப்பெட்டிகளுக்குள் போடவும். தபால் மூலம் இறுதிநாள் அனுப்பினால் வாக்குச்சீட்டு செல்லுபடியற்றதாக மாறிவிடும்.