சுவிஸ் அரசு மக்களின் எதிர்கால நிதிதிட்டங்களை குறைத்ததனால் கடைகளை உடைத்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்

சுவிட்சர்லாந்து அரசானது மக்களின் எதிர்கால நிதிதிட்டங்களை குறைத்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் கடைகளை உடைத்து நொறுக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் ஜெனிவா மாகாண அரசு தான் இந்த அதிரடி நிதிதிட்ட குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மாகாண அரசின் செயல்பாடுகளால் ஆத்திரம் அடைந்த சில போராட்டக்காரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றுக்கூடி போராட்டம் தொடர்பாக திட்டமிட்டுள்ளனர்.

பின்னர், பொலிசாரிடம் அனுமதி பெறாமலேயே ஜெனிவா நகர வீதிகளில் நேற்று இரவு 9 மணியளவில் நுழைந்துள்ளனர்.

சுமார் 400 பேர் கொண்ட போராட்டக்காரர்கள் ஜெனிவா நகர வீதிகளில் நுழைந்தவுடன் அவர்களில் சுமார் 30 பேர் அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடைகளை உடைத்து நொறுக்கியது மட்டுமில்லாமல், 19ம் நூற்றாண்டை சேர்ந்த கிராண்ட் தியேட்டரையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்னர் இன்று காலை எழுந்து வீடுகள் மற்றும் கடைகளை பார்த்த உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய Jean Philippe என்ற பொலிஸ் அதிகாரி, சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஏனெனில், அது மிக மோசமான வன்முறையாகவும் மாற வாய்ப்புள்ளது. இந்த அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட 30 பேர் தொடர்பான விவரங்களை சேகரித்துள்ளோம். அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார்.

இரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தில் லட்சக்கணக்கான பிராங்க் மதிப்பில் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.