கைகளை 10 கோடிக்கு காப்பீடு செய்த சலூன் கடை தொழிலாளி!

சுவிட்சர்லாந்து நாட்டில் முடித்திருத்தும் சலூன் கடை வைத்துள்ள தொழிலாளி ஒருவர் தன்னுடைய கைகளை சுமார் 10 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Niederuzwil என்ற நகரில் Roberto Cianciarulo என்ற 28 வயதான வாலிபர் வசித்து வருகிறார்.

இவர் ஒரு முடித்திருத்தும் தொழிலாளி என்பதால், இதே நகரில் சொந்தமாக சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

முடி திருத்தும் தொழிலில் வாலிபர் சிறந்தவராக விளங்கியதால், இப்பகுதியில் இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில், சலூன் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் ‘முடி திருத்தும் தொழிலை சிறப்பாக செய்கிறீர்கள். எந்த நேரத்திலும் கைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில், உங்களை போன்ற தொழிலாளிகளுக்கு கைகள் தான் முக்கியம். கைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் தொழிலை தொடர முடியாமல் போய்விடும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாடிக்கையாளரின் கருத்தை கேட்ட பின்னர் வாலிபருக்கு பல யோசனைகள் எழுந்துள்ளன.

பிரபல கால்பந்து வீரர்கள், மொடல்கள் என பல பிரபலங்கள் தங்களுடைய உடல் உறுப்புக்களை காப்பீடு(Insurance) செய்திருப்பதை வாலிபர் பல செய்திகளில் படித்தது நினைவுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து, உடனடியாக காப்பீடு நிறுவனத்தை தொடர்புக்கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு தற்போது தனது கைகளை 7,50,000 பிராங்கிற்கு(10,85,90,483 இலங்கை ரூபாய்) காப்பீடு செய்துள்ளார்.

ஏதாவது ஒரு சூழலில் இவரது கைகளில் காயம் ஏற்பட்டு அல்லது நோய் காரணமாக முடி திருத்தும் தொழிலை செய்ய முடியாமல் போனால், காப்பீடு நிறுவனம் மூலமாக வாலிபருக்கு 7,50,000 பிராங்க் தொகை வழங்கப்படும்.

சுவிட்சர்லாந்து நாட்டு வரலாற்றிலேயே ஒரு முடித்திருத்தும் தொழிலாளி தனது கைகளை காப்பீடு செய்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.